5 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை!! சம்பவத்தை நேரில் கண்டவர் சாட்சியம்
மஸ்கெலியா காவல்நிலைய பிரிவிற்கு உட்பட்ட மஸ்கெலியா சாமிமலை தொங்கத் தோட்டப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண், அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இன்று சிரேஸ்ட சட்ட வைத்திய நிபுணர் இனோக்கா ரத்நாயக்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போது குறித்த நபர் மரக் கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் மஸ்கெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்று கிழமை 3 மணியளவில் மதுபோதையிலிருந்த ஒரு குழுவினர், குறித்த நபருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழைத்து மரக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த குறித்த நபரை பொதுமக்கள் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போது வழியில் அவர் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர் மஸ்கெலியா சாமிமலை தொங்கத் தோட்டத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான தம்பிராஜ் கருப்பையா எனவும் தெரிய வந்துள்ளது.
திடீர் மரண விசாரணை மூலம் சம்பவத்தை நேரில் கண்ட சிறுவன் ஒருவன் சாட்சியமளித்தையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.