வீடுவீடாகச் சென்று தர்மம் கேட்கவும் தயார் - அரசை சாடிய முருந்தெட்டுவே ஆனந்த தேரர்
இலங்கை மக்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக வீடுவீடாகச் சென்று தர்மம் கேட்பதற்கு தயாராவதாக தென்னிலங்கையைச் சேர்ந்த முன்னணி பௌத்த தேரரான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய - மஹிந்த அரசாங்கத்தின் உதாசீனப் போக்கின் காரணமாகவே இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு முன் நின்று செயற்பட்ட கொழும்பு - நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையின் விகாராதிபதியான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையான விமர்சித்தார்.
சுகாதார அமைச்சை விமர்சிக்கின்ற சிலருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் வழங்கலை அரசாங்கம் தடை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
நாங்கள் ஏற்கனவே பகிரங்கமாகவே அரசாங்கத்தின் குறைப்பாடுகளை விமர்சித்து வருகின்றோம். பல மருத்துவர்கள் எம்மை சந்தித்து நாடு எதிர்கொள்ளப் போகின்ற ஆபத்துக்களைப் பற்றி விளக்கம் வழங்குகின்றனர்.
அதனை நாங்கள் நாட்டு மக்களின் முன்னேற்பாட்டிற்காக தெரிவித்துவருகின்றோம். இந்த நிலையில் தடுப்பூசி அதிகளவில் தேவைப்படுகின்ற போதிலும் அதனை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் அதீத கவனத்தை செலுத்துவதில்லை.
ஏற்கனவே நாட்டை முடக்கும்படி நாங்கள் வலியுறுத்திய போதிலும் அதனை கண்டுகொள்ளவில்லை. இவ்வாறான உதாசீன நிலைமையில் தொற்று பரவி வருகின்றதால் இன்று தாமதித்தேனும் நாட்டை முழுமையாக மலேஷியாவைப் போல முடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கத்திற்கு பணம் போதாதிருந்தால் அதனை அவர்கள் சொல்லவேண்டும்.
அதற்காக நிதி சேகரிப்பதற்காக நாட்டு மக்களிடையே சென்று வீடு வீடாக தெருத்தெருவாகச் சென்று தர்மம் கோருவதற்கும் பௌத்த பிக்குகள் தயாராகவே இருக்கின்றார்கள் என்றார்.