இனியும் முஸ்லிம் கட்சிகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது : இம்ரான் காட்டம்
இனியும் முஸ்லிம் கட்சிகளை நம்பி முஸ்லிம் சமூகம் ஏமாந்து விடக்கூடாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நமது சமூகம் ஏனைய சமூகத்தவரைப் போன்று இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழ அனைத்து முஸ்லிம்களும் ஐக்கிய மக்கள் சக்தியோடு ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.
பல இடங்களில் முஸ்லிம் சமூகத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயங்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களால் பேச முடியாது என்பது நாமறிந்த உண்மையாகும்.
முஸ்லிம்களின் உரிமையைப் பெற்றுத் தருவோம் என்று ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் கட்சிகள், உரிமைக் கோசத்தை முன்வைத்து வாக்குகளைப் பெற்று இன்று வெறும் அற்ப சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்து விட்டன.
திருகோணமலை மாவட்டத்ததைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றார். ஆனால் அவரால் இந்த வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
ஏனெனில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட சலுகைகளுக்குள் இது போன்ற உரிமை சார்ந்த விடயங்கள் இல்லை. அவர்கள் கேட்டதையெல்லாம் இந்த அரசு கொடுத்து விட்டது. இனி எதுவும் கேட்க முடியாது.
அதனால் தான் இவர்களால் இது போன்ற விடயங்களைப் பற்றி கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. பேச முடியாமல் உள்ளது. இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களாக செயற்படும் இவர்களால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பெற்றுத்தர முடியாது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்.
இப்போது முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்களை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் பேசி வருகின்றார்கள்.முஸ்லிம் கட்சிகள் செய்ய வேண்டிய இந்தப் பணியை ஐக்கிய மக்கள் சக்தி செய்கின்றது" என மேலும் தெரிவித்துள்ளார்.