முத்துநகர் விவசாயிகள் போராட்டம் : பிரதமரின் கால அவகாசம் இன்றுடன் நிறைவு
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் 33 ஆவது நாளாக இன்றும் (19) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் (Harini Amarasuriya) குறித்த விவசாயிகளுக்கு தீர்வுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் இறுதி நாள் இன்று எனவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த விவசாயிகளின் நிலத்தை அபகரித்து தனியார் நிறுவனங்களுக்காக சூரிய மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தியாக்கிரக போராட்டம்
இந்தநிலையில், "வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி" எனும் பிரதான சுலோக அட்டையை காட்சிப்படுத்தியவாறு முத்து நகர் விவசாயிகள் தீர்வு வேண்டி போராடி வருகின்றனர்.
அத்துடன் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த காணியை அபகரித்ததால் சுமார் 352 ஏழை விவசாய குடும்பங்கள் நடுத்தெருவில் இறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
தேசிய மக்கள் சக்தியின் ஆளும் தரப்பு மீது விவசாயிகள் நம்பிக்கையிழந்த நிலையில் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி அன்றாட ஜீவனோபாயம் இழந்த நிலையில் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்துக்கு நேற்று (18) விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) குறித்த விவசாயிகள் பேரணியாக வந்து சந்திக்க முயற்சித்த நிலையிலும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தங்களுக்கான நிரந்தர தீர்வை விரைவாக வழங்குமாறும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடத்தில் இவ் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


