கட்டுநாயக்கவில் வெளிச்சத்துக்கு வந்த பங்களாதேஷ் பிரஜைகளின் பாரிய திட்டம்
ஈரானின் தெஹரானுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்த மூன்று பங்களாதேஷ் பிரஜைகள், போலியான இலங்கை கடவுச்சீட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூவர், இன்று மாலை 3.10 மணிக்கு ஷார்ஜாவுக்குப் புறப்படும் ஏர் அரேபியா விமானம் G9509-இல் ஏறுவதற்கு முன் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
அதன்போது, அவர்களிடம் இருந்தும் இயல்பான பங்களாதேஷ் கடவுச்சீட்டுக்களே காணப்பட்டுள்ளன.
விசாரணையில் தெரியவந்த விடயம்
எனினும், BIA-விலுள்ள குடிவரவு கண்காணிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர்களது பயணப்பைகளில் போலியான இலங்கைப் கடவுச்சீட்டுக்கள் மற்றும் நாட்டுக்குள் வெளியேறும் முத்திரைகள் உள்ளடங்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணையில், இந்த மூவர் கடந்த மே மாதத்தில் சுற்றுலா விசாவிலே நாட்டுக்குள் பிரவேசித்து, போலியான பயண ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவுக்குப் பங்களாதேஷ் கடவுச்சீட்டை பயன்படுத்தி சென்று, அங்கிருந்து போலி இலங்கைப் கடவுச்சீட்டுகளுடன் தெஹரானுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள், இலங்கையில் உள்ள ஒரு உள்ளூர் முகவரிடமிருந்து பெரும் தொகை பணம் செலுத்தி இப்போலி ஆவணங்களை பெற்றதாகவும், ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அதிகாரிகள் இவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
