நெல்சன் மண்டேலாவுக்கு நாமல் இழைத்த அநீதி! ஆளுங்கட்சி எம்.பி சிற்றம்
சிறையில் இருந்து முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கூற்றை சுட்டிக்காட்டி செய்தி அனுப்பிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதன்போது, இருவரின் சிறைவாசப் பின்னணியையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, சனிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் வாசிக்கப்பட்ட செய்தியொன்றில் மண்டேலாவின் கூற்றை குறிப்பிட்டிருந்தார்.
தென்னாப்பிரிக்க தலைவருக்கு அநீதி
அதில், "கஷ்டங்கள் சிலரை உடைக்கின்றன; ஆனால் மற்றவர்களை மேலும் வலுவாக்குகின்றன" என்ற மண்டேலாவின் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், “யார் நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டுகிறார்? நாமல் ராஜபக்சவா?” எனக் குறிப்பிட்ட நஜித் இந்திக, ஒடுக்குமுறை மற்றும் இனவெறி முறைமைக்கு எதிரான போராட்டத்துக்காக மண்டேலா சிறைவாசம் அனுபவித்து, பின்னர் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக நாட்டை வழிநடத்திய வரலாற்றையும், நாமல் ராஜபக்ச தற்சமயம் எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுகளையும் ஒப்பிட்டு ஒருபோதும் பேச முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ராஜபக் குடும்பத்தினரின் ஆட்சியையும் விமர்சித்த அவர், நாமலின் தந்தையும் சித்தப்பாவும் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியைக் குறிப்பிட்டு, தற்போதைய சூழ்நிலையில் மண்டேலாவை மேற்கோள் காட்டுவது மறைந்த தென்னாப்பிரிக்க தலைவருக்கு செய்யும் அநீதியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |