“இரண்டு வாரங்களுக்குள் 50 மில்லியன் ரூபா வேண்டும்” நளினுக்கு வந்த கடிதம்
அவதூறான குற்றச்சாட்டுக்களை தன் மீது முன்வைத்துள்ளதாகவும் இதனால் தமக்கு 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கக் கோரியும் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாராவுக்கு சட்டக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சுரேஸ் சல்லேவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பணம் செலுத்தத்தவறினால் நளின் பண்டாரவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று சாலேயின் சட்டத்தரணி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சல்லே மீது குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் நளின் பண்டார, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானுக்கு, மேஜர் ஜெனரல் சல்லேவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டும் உள்ளடங்குகிறது.
மேஜர் ஜெனரல் சல்லே இந்தியாவில் இராணுவப் படிப்பை முடிக்கவில்லையென்ற குற்றச்சாட்டையும் நளின் பண்டார சுமத்தியிருந்தார்.
எனினும் இதனை மறுத்துள்ள சல்லேயின் சட்டத்தரணி இராணுவப் படிப்பை தமது வாடிக்கையாளரான சல்லே முடித்துவிட்டாரென்று தெரிவித்துள்ளார்.