இலங்கையில் இன்சுலின் தட்டுப்பாடா.... சுகாதார அமைச்சர் விளக்கம்
இலங்கையில் அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் இருப்பு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக பொதுமக்கள் அநாவசிய பயத்தை ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (GID) இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேவையான இன்சுலின் இருப்பு
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நாட்டில் தேவையான இன்சுலின் இருப்பு உள்ளது.
மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்து இருப்பை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் சில மருந்துகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விநியோகஸ்தர்களின் பலவீனங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்தன.
மருந்து தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு, பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
