நல்லூரின் கொடிச்சீலைக்குப் பின்னால் இப்படியும் ஒரு வரலாறா...
உலகெங்கிலும் பரந்து வாழும் பக்தர்களால் மிகுந்த பக்தி சிரத்தையோடு வழிபடப்பட்டு வருகின்ற வரலாற்று தொன்மை மிக்க தலங்களுள் மிக முக்கியமானதொன்றாக நல்லூர் கந்தசுவாமி ஆலயம் விளங்குகின்றது.
ஆலயத்தின் மரபுவழி பாரம்பரியங்களைஅன்று தொட்டு இன்று வரை மாறாமல் பேணுவது ஆலயத்திற்கே உரிய தனித்துவ பண்பேன்றே கூற வேண்டும்.
கலியுக வரதனான கந்தப்பெருமானை நம் சொந்தப்பெருமான் என்று அழைத்து உரிமையோடு தமிழர் தம் வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இத்தகைய சிறப்புகள் நிறைந்த முருக வழிபாட்டிலே பல்வேறு சிறப்பம்சங்கள் பொருந்தியதாக இருக்கக்கூடிய நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஒவ்வொரு நாள் உற்சவமும் தனித்துவமானவை எனவே கூற வேண்டும்.
அலங்காரங்களுக்குப் பெயர் போன நல்லைக் கந்தன் அலங்காரக் கந்தனாக எழுந்தருளி அருள்பாலிக்கும் அற்புத தருணங்களை மகோற்சவ காலங்களில் காணலாம்.
செங்குந்தர் என்ற வம்சத்தினர்
நல்லைக்கந்தன் ஆலய கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்கும் நடைமுறையினை செங்குந்தர் என்ற வம்சத்தினராலேயே காலாகாலமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
முருகப்பெருமானை தமது குலதெய்வமாகக் கொண்ட செங்குந்தர் மரபினைச் சேர்ந்தவர்கள் தமது பரம்பரை விருத்தியடைய வேண்டி முருகப்பெருமானிடம் நேர்த்தி வைத்ததாகவும், நேர்த்திக் கடனைத் தீர்க்கும் பொருட்டு கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலையை வழங்கி வைத்ததாகவும், அதுவே பின்னாளில் மரபாக உருவானதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த மரபு தொன்று தொட்டு இன்று வரை சிரத்தையோடு கடைப்பிடிக்கப்பட்டு வருவது சிறப்பம்சமே. நல்லை கந்தன் ஆலய மகோற்சவத்தை ஒட்டி ஒவ்வொரு வருடமும் 24 முழம் நீளம் கொண்ட புதுக் கொடிச்சீலையில் வேலும், மயிலும் வரையப்பட்டு கொடுச்சீலையும் தயார் செய்யப்படுகிறது.
அதேபோன்று 24 முழம் கொண்ட கொடிக்கயிறும் தயார் செய்யப்படுகின்றது .
குறிப்பாக செங்குந்தர் பரம்பரையினரின் மிக முக்கியமான பாரம்பரிய தொழிலாக நெசவுத் தொழில் காணப்படுவதால், அவர்களே கொடிச்சீலையை நெய்து நல்லூர்க் கந்தனுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நெசவுத் தொழில் புழக்கத்தில் இல்லாத காரணத்தால், புதிய துணி வாங்கி அதில் வேலும், மயிலும் வரையப்பட்டு வழங்கப்படும் வழக்கம் தொடருகின்றதாகவும் கூறப்படுகிறது
முருகப்பெருமானுக்கு கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர்கள் யாரென்று ஆராய முற்படுகின்றபோது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழ்ந்து வந்த ஓர் இனமாக செங்குந்தர் எனும் கைக்கோளர் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி பொருந்திய வேலை உடையவர் என்று பொருள் கொள்ளப்படுகிறது அதேநேரம் ஆரம்ப காலங்களில் போர்களின் போது அரசர்களின் பாதுகாப்பிற்காக ஈட்டி பொருந்திய வேலை சுழற்றுபவர்கள் என்பதனால், இவர்கள் கைக்கோளர் எனவும் அழைக்கப்பட்டு வந்தனர்.
செங்குந்தர்களைப்பொறுத்தவரை ஈட்டி மட்டுமல்லாது வாளும் பிடித்து போரிடக் கூடிய வல்லமை பொருந்தியவர்களாயிருந்தனர் அதன் காரணமாகவே மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய படை வீரர்களாக பணியாற்றியுள்ளனர் என்பது வரலாறு.
இவர்கள் குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்தவர்களாதலால் முருகனை தமது குலதெய்வமாக கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் முருகன் தோன்றம் பற்றி கூறப்படுகின்ற கதைகளில் பார்வதியின் காற்சிலம்பில் இருந்து தோன்றிய வீரவாகுத்தேவரின் வழி வந்த வழித்தோன்றல்களே செங்குந்தர்கள் என நம்பப்படுகின்ற இன்னொரு வரலாறும் அவர்களுக்கு உண்டு.
செங்குந்தர்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், ஆற்காடு, ஆரணி, காமக்கூர், தேவிகாபுரம், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டபுரம், திருமழபாடி, தஞ்சை, சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பரந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
முக்கிய தொழிலாக நெசவு
இவர்களின் முக்கிய தொழிலாக நெசவு இருந்தாலும், வணிகம் போன்ற பிற தொழில்களிலும் ஈடுபட்டுகின்றார்கள் வியாபார நோக்கில் இலங்கைக்கு வருகை தந்த செங்குந்தர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் இராசதானியை அண்மித்த பகுதிகளில் தமது வாழிடங்களை அமைத்துக்கொண்டார்கள்.
அவர்கள் இன்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்த பகுதிகளான, கல்வியங்காடு, மற்றும் வடமராட்சியில் கரவெட்டி பகுதியிலும் இவை தவிர மட்டக்களப்பின் ஆரையம்பதி, தாமரைக்கேணி,கோட்டைக்கல்லாறு போன்ற இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான வரலாற்றுப்பிண்ணணியினைக்கொண்ட செங்குந்தரகளே வழிவழியாக தமது முன்னோர்கள் கைக்கொண்ட நடைமுறைகளின் அடிப்படையில் இன்றும் தமது தொழும்புகளை மரபுவழி மாற்றமின்றி நல்லை கந்தனின் சந்நிதியில் செய்து வருகின்றார்கள்
அலங்காரக்கோலம் காட்டி அழகு கொண்ட முருகனின் அழகில் இப்படியான மரபுத்தொடர்ச்சியும் இருந்துகொண்டிருப்பதும் பெருமைக்குரிய விடயம் என்றே கூறலாம்.
