யாழ். நல்லூர் பகுதியில் மலையென குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் - பொதுமக்கள் கடும் சிரமம்
யாழ். நல்லூர் (Nallur) பிரதேச சபையின் குப்பை சேமிப்பு மையத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் அவை எரியூட்டப்படுகின்றதால் ஏற்படும் புகையால் அப்பகுதி மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeewan Jayachandramurthy) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “காரைக்கால் இந்து மயானத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை சேமிப்பு (சேதனப் பசளையாக்கும்) மையத்தில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வானளாவிய அளவில் சேமிக்கப்பட்டு வருகின்றன.
புகை மற்றும் சுகாதாரக்கேடுகள்
இதனால் சுற்றுவட்டார மக்கள் கடும் அதிருப்தியுடனும், சுகாதார அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.
இக்குப்பைகள் அவ்வப்போது எரியூட்டப்படுவதால், துர்நாற்றம், புகை மற்றும் சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன.
இது தொடர்பாக பலமுறை பொதுமக்கள் முறையிட்டிருந்தாலும், பிரதேச சபையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
உடனடி தீர்வு வேண்டி கோரிக்கை
அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரை நேரில் அழைத்து வந்து, இப்பிரச்சினைக்கான நிலைமையை காட்டியிருந்தேன்.
அவர் வழங்கிய உறுதிமொழிகளுக்குப் பிறகும், இன்றும் மீண்டும் அதே இடத்தில் குப்பைகள் எரியூட்டப்பட்டமை மக்கள் கோபத்தையும் வருத்தத்தையும் அதிகரித்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் உடனடி தீர்வு வேண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். பொது சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கான நிரந்தர தீர்வு விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. என ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
