யாழ். நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் நடந்த கொள்ளை! சிக்கிய சந்தேகநபர்
யாழ்ப்பாணம் - நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் கடந்த 4ஆம் திகதி 20 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள ஆசிரியரின் வீடொன்றில் ஜூலை 4ஆம் திகதி நகைகள் திருடப்பட்டன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் நாவற்குழியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து 7 தங்கப் பவுண் தாலிக்கொடி, நெக்ளஸ், ஒரு பவுண் அளவுடைய 3 சங்கிலிகள், 3 சோடி தோடுகள், ஒரு மூக்குத்தி, 2 மோதிரங்கள், பெறுமதி வாய்ந்த தொலைபேசி ஒன்று மற்றும் 2 பவுண் தங்க நகையை விற்பனை செய்த சிட்டை என்பன கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நாளை முற்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.