இந்தத் தகவல்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படமாட்டாது- நாமல் திட்டவட்டம்!
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் உலக அளவில் அவதானத்திற்கு உள்ளாகும் என்பதால் இது தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் நாமல் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் கோப் குழுவும் கடந்தக் காலங்களில் அவதானம் செலுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கோப் குழுவிடமிருந்து கிடைக்கப்பெறும் புதிய அறிக்கைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் உலக அளவில் கவனம் செலுத்தப்படும் என்பதால், கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் என்றவகையில் தானோ அல்லது தம்முடைய அரசாங்கமோ பாதுகாக்கப்போவதில்லை எனவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடிவக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.