மொட்டுவின் அதிபர் வேட்பாளராக நாமல் : நிறைவேற்றப்பட்டது தீர்மானம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணை நேற்று முன்தினம் (25) கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியின் செயலாளர் எம்.பி சட்டத்தரணி சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டே கொட, இந்திக்க அனுருத்த, ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி ரோஹன திஸாநாயக்க மற்றும் மாத்தளை மாவட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாவட்ட அமைப்பாளருக்கும் மகனுக்கும் அழைப்பு இல்லை
எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட அமைப்பாளர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகனும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித பண்டார தென்னகோனும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாமல் ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற பிரேரணைக்கு உள்ளூராட்சி பிரதிநிதிகள் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
மகிந்தவை பயன்படுத்தி ஆதாயம் பெற முயற்சி
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவத்தை பயன்படுத்துவதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் கணிசமான ஆதாயங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அங்கு கூடியிருந்த பெரும்பாலானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மாத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |