வட பகுதிக்கு விரைந்த அமைச்சர் நாமல் - அதிகாரிகளுக்கு விடுத்துள்ள உத்தரவு
வட பகுதியில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்கும் தடுப்பூசி மருந்தை விநியோகிக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளை விரைவாக மக்களுக்கு செலுத்துவதன் மூலமே தடைகள் இன்றி இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
அந்த வகையில் யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் செயற்படும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிலையங்களான அரியாலை, பிரப்பன்குளம், மகாமாரியம்மன் திருமண மண்டபம், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம், கோப்பாய் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுடன், பருத்தித்துறை கரவெட்டி பகுதிகளில் செயற்படும் தடுப்பூசி நிலையங்களுக்கும் நாமல் ராஜபக்ஸ விஜயம் செய்தார்.
இதன்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. தத்தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தடுப்பூசி மருந்து செலுத்தப்படும் போது, அந்த நிலையத்திற்கு சென்று தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுகின்றேன்.
இதேவேளை அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் உள்ளடங்கலாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் சேவைகள் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நாடாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.
பதிவுசெய்யப்பட்ட நடமாடும் சேவை ஊடாக பொது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
எதிர்வரும் நாட்களில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு தடுப்பூசி அடுத்த கட்டம் வழங்கப்படவுள்ளதாகவும், முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட தடுப்பூசிகளைப் விரைவாக மக்களுக்கு செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரித்து மிகக் குறைந்த நாட்களில் தற்போது வழங்கப்பட்டுள்ள 50 ஆயிரம் தடுப்பூசியை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
பொலிஸ், இராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து விரைவில் அரசினால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்துமாறு சுகாதார பிரிவினருக்கு அவர் அறிவுறுத்தினார்.