கொழும்பிலிருந்து வந்த உத்தரவு : கஜேந்திரனிடம் யாழ். குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் சுமார் ஒன்றரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக நேற்று (20) அங்கு விசாரணைக்கு சென்ற நிலையில் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த செல்வராசா கஜேந்திரன், கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி மாலதி அக்காவினுடைய நினைவு தினம் செய்தமை தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இந்த விசாரணையின் ஆரம்பத்தில் கொழும்பிலிருந்து இந்த விசாரணையை நடத்துமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடைய தடை செய்யப்பட்ட சீருடை அணிவிக்கப்பட்ட படம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்தியிருப்பதாகவும், அது தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு தங்களுக்கு பணிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்கள்.

இதன்போது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வரிச்சீருடையுள்ள அல்லது இலங்கை அரசாங்கத்தினாலே தடை செய்யப்பட்ட அடையாளங்களைக் கொண்ட புகைப்படங்கள் எதற்கும் நாங்கள் அஞ்சலி செலுத்தவில்லை. ஆகவே நாங்கள் சட்டத்துக்கு முரணாக எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்ற விடயத்தை நான் தெளிவுபடுத்தியிருந்தேன்.
என்னைப் பொறுத்தவரையிலே இந்த விசாரணை என்பது தமிழ் மக்களை அச்சுறுத்தி, நெருக்கடிக்குள் தள்ளி, அச்சத்தை ஏற்படுத்த இறந்தவர்களை நினைவு கூருகின்ற நிகழ்வுகளை முற்றாக தடை செய்வதுதான் அரசாங்கத்தினுடைய ஒரு நோக்கமாக இருக்கிறது.
ஒருபுறத்திலே, இறந்தவர்களை சுதந்திரமாக நினைவு கூர முடியும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்குச் சொல்கிறார். ஆனால் அதே அரசாங்கத்தினுடைய உளவுத்துறை கொழும்பிலிருந்து ஒரு உண்மைக்கு புறம்பான, அப்பட்டமான பொய்யான அடிப்படைகளைக் கொண்ட ஒரு அறிக்கையைத் தயார்படுத்தி இங்கே அனுப்புகிறது.
அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடைய அடையாளங்களோடு மீளுருவாக்குகின்ற நோக்கத்தோடு இந்த நினைவேந்தல் நடந்திருக்கிறது, இதைப் பற்றி விசாரிக்குமாறு அவர்கள் இங்கே அறிக்கை அனுப்புகிறார்கள் என்று சொன்னால், இது தொடர்பாக அரசாங்கம் ஒரு விசாரணை நடத்த வேண்டும்.

அப்படி இல்லாமல் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு நல்ல பிள்ளையாக நடிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்காகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்தும் ஏனைய சர்வதேச ஐ.நா அமைப்புகளிடமிருந்தும் தங்களுக்கு ஒரு நற்பெயரை ஈட்டிக் கொள்வதற்காக தாங்கள் இந்த சட்டங்களை மதித்து நடக்கிறோம், அடிப்படை உரிமைகளை அங்கீகரித்திருக்கிறோம் என்று ஒரு பக்கத்திலே பொய்களைச் சொல்லிக்கொண்டு, மறுபுறத்திலே தங்களுடைய அரச இயந்திரத்தைப் பயன்படுத்தி எங்களை நெருக்கடிக்குள் தள்ளுகிற, அச்சுறுத்துகிற, எங்களுடைய அடிப்படை உரிமைகளை மறுக்கிற செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே நாங்கள் ஒரு வரி உடுப்போடு இருந்த ஒரு படத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக அறிக்கை தயாரித்து அனுப்பிய அந்த அதிகாரியை இடைநிறுத்தி, அவருக்கு எதிராக அது தொடர்பான ஒரு முழு விசாரணை நடத்தி அவர் தண்டிக்கப்பட வேண்டும், அவர் வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
உண்மையில் அநுர அரசாங்கம பக்கச்சார்பற்று நடக்கின்றது என்பது உண்மையாக இருந்தால் இது செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் அநுரகுமார திசாநாயக்க தான் தமிழர்களுடைய நினைவேந்தல் உரிமைகளை மறுப்பதற்காக திட்டமிட்டு தன்னுடைய தலைமையின் கீழ் இருக்கக்கூடிய காவல்துறையினரையும் உளவுத்துறையையும் இவ்வாறு பயன்படுத்துகிறார் என்ற முடிவுக்கு நாங்கள் வரவேண்டியிருக்கும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |