யாழ். நெல்லியடியில் காவல்துறையினரின் தடைகளை மீறி நினைவேந்தல்
மாவீரர்நாள் வாரம் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்க காவல்துறையினர் தடையேற்படுத்தியிருந்தனர்.
தடைகளை மீறியும் கொட்டகை அமைக்கப்பட்டு, மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.
நெல்லியடி நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகைகளைப் காவல்துறையினர் அகற்ற முற்பட்டபோது, ஏற்பாட்டுக் குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறையினருடன் வாக்குவாதம்
இதையடுத்து, ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஐவரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்த வேளை, கொட்டகைகளை காவல்துறையினர் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காவல்துறை விசாரணையின் பின்னர் ஏற்பாட்டுக் குழுவினர், மீண்டும் அதே இடத்தில் கொட்டகை அமைக்க முற்பட்டபோது காவல்துறையினருடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறையினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும், நெல்லியடி நகரில் நினைவேந்தல் கொட்டகை மீண்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |