போல் ஸ்டீபன்ஸை சந்தித்த தேசிய மக்கள் சக்தி : பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலும் பேச்சு
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸை இன்று சந்தித்துள்ளது.
கட்சியின் உறுப்பினர்களான ஹரிணி அமரசூரிய மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது, தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டமை, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலை
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்தும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், மக்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலை உரிய காலத்தில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமை குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.