கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்ட பாரிய சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றி எரிகின்றது!
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கே 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட எக்ஸ்-பிரஸ் பெர்ல் ( X-PRESS PEARL) என்ற சரக்குக் கப்பல் நேற்று திடீரென தீப்பிடித்துள்ளது.
இதையடுத்து குறித்த கப்பலுக்கு உதவும் வகையில் இலங்கை கடற்படை விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தது.
இரண்டு ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் மற்றும் ஒரு வேகப் படகு ஆகியவை இப்பகுதிக்கு அனுப்பப்பட்டன.
தற்போது, இந்த கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இழுபறி படகு ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த கப்பல், 2021 மே 15 ஆம் திகதி இந்திய துறைமுகமான ஹசிராவிலிருந் 1486 கொள்கலன்களையும் பிற ரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களையும் கொண்டு சென்றது.
2021 மே 20 ஆம் திகதி கொழும்பு கடற்கரையில் இருந்து 9.5 கடல் மைல் தொலைவில் கப்பல் நங்கூரமிட்டபோது தீ விபத்து ஏற்பட்டது.
கப்பலில் உள்ள 25 பேரில் பிலிப்பினோக்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் ரஷ்யர்கள் அடங்குகின்றனர்.
கப்பலில் இரசாயனங்கள் கசிந்ததற்கு ஏற்பட்ட எதிர்வினையால் இந்த தீ ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், அவசர காலங்களில் நடவடிக்கை எடுக்க கடற்படை சிறப்புப் படைகளும் கடலோர காவல்படையும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







