போலி நாணயதாளுடன் சிக்கிய கடற்படை சிப்பாய்..!
அம்பாறை - இங்கினி யாகல பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் உள்ளிட்ட 3 பேர் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கினியாகல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள மதுபானசாலைக்கு மதுபானம் கொள்வனவு செய்வதற்காக முச்சக்கரவண்டியில் வருகைதந்த மூவரில் ஒருவர் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளினை வழங்கி மதுபானம் கொள்வனவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இருப்பினும் சந்தேகநபரால் வழங்கப்பட்ட நாணயத்தாள் போலியானது என அறிந்து கொண்ட கடையின் உரிமையாளர் உடனடியாக ஊழியர்கள் இருவரை மோட்டார் சைக்கிளில் அனுப்பி அவர்களை பின்தொடருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
4 போலி நாணய தாள்கள்
அதற்கமைவாக சந்தேகநபர்களை பின்தொடர்ந்த ஊழியர்கள் அவர்களை மடக்கி பிடித்து பின்னர் காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேகநபர்கள் மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23, 25 மற்றும் 26 வயதுடைய நாமல்தலாவ, அம்பாறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 5,000 ரூபாய் பெறுமதியான 4 போலி நாணய தாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர் கடற்படை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இங்கினி யாகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
