நெடுந்தீவு படகுச் சேவைகள் முடக்கம்: கடலில் தத்தளித்த குமுதினிபடகும் பயணிகளும்
யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளமையால் , நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது
குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நெடுந்தாரகை மற்றும் வடதாரகை என்பன ஏற்கனவே பழுதடைந்துள்ள நிலையில் , குமுதினி படகு சேவையில் ஈடுபட்டிருந்தது.
கடலில் தத்தளித்த குமுதினி
இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பெண்கள் , குழந்தைகள் முதியவர்கள் என 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த குமுதினி படகு , புறப்பட்டு சில நிமிடங்களில் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்தது

அதனை அடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர் தமது படகில் சென்று , குமுதினியில் இருந்த பயணிகளை மீட்டு , குறிகாட்டுவான் பகுதிக்கு மீண்டும் அழைத்து வந்தனர்
குமுதினி படகு பழுதடைந்தமை தொடர்பிலும் , நெடுந்தீவு நோக்கி வருகை தந்தவர்கள் குறிகாட்டுவானுக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டமையை அறிந்து , நெடுந்தீவில் இருந்து "கரிகாலன்" எனும் தனியார் படகு குறிகாட்டுவான் நோக்கி சென்று , அங்கிருந்த பயணிகளை அழைத்துக்கொண்டு மீண்டும் நெடுந்தீவை சென்றடைந்தது.
அதேவேளை பழுதடைந்த குமுதினி படகும் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்றையதினம் ஏற்பட்ட நெருக்கடி
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 07 மணிக்கு நெடுந்தீவில் இருந்து சத்சரா எனும் தனியார் படகு, குறிகாட்டுவானில் இருந்து மீண்டும் காலை 8.30 மணிக்கு நெடுந்தீவுக்கு நோக்கி பயணிக்க தயாரான போது அரச உத்தியோகஸ்தர்கள் , சுற்றுலாவிகள் , நெடுந்தீவு மக்கள் என பலர் படகில் ஏற காத்திருந்தமையால் , நெருக்கடிகள் ஏற்பட்டன

பலத்த சிரமங்கள் மத்தியில் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்
குறிகாட்டுவானில் இருந்து சுமார் ஒரு மணி நேர படகு பயணத்தின் பின்னரே நெடுந்தீவை அடைய முடியும். அவ்வாறான நீண்ட நேர பயணத்தின் போது , படகுகள் பழுதடைதல் , படகு சேவைகளில் ஏற்படும் தடங்கல்கள் என்பவற்றால் நெடுந்தீவு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் , நெடுந்தீவுக்கான சுற்றுலா துறையும் வீழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |