சம்பள விவகாரம் : பணிப்புறக்கணிப்பில் குதிக்கப்போகும் அதிபர் - ஆசிரியர்கள்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.
குறித்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட கல்வித் துறை ஊழியர்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்ட போதிலும், இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் கிடைக்கவில்லை எனவும், இம்மாதம் 30 ஆம் திகதி சுகவீன விடுமுறை அறிக்கை சமர்ப்பித்து ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2027 வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வித் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எமது கடும் எதிர்ப்பு உள்ளது.

இது தொடர்பில் நாம் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பேசியுள்ளோம். எதிர்வரும் முதலாம் திகதிதான் விசேடமாகக் கல்வி விவாதம் நடைபெறவுள்ளது. எனவே, இந்தக் கல்வி விவாதத்திலாவது இது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பிரிவெனா ஆசிரியர்கள் என அனைவரின் பிரச்சினைகள் தொடர்பிலும் எவ்வித வேலைத்திட்டமும் இல்லை.
தொழிற்சங்க நடவடிக்கை
இந்த நிலையில், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி என்ற ரீதியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி ஒருநாள் சுகவீன விடுமுறை அறிக்கை சமர்ப்பிக்கும் நடவடிக்கைக்குச் செல்லத் தீர்மானித்துள்ளோம்.

இந்த நாட்டில் உள்ள சுமார் 250,000 ஆசிரியர்கள், அதேபோல் 10,110 பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனைவரும் இதில் இணைவார்கள் என்பதைத் தெளிவாகக் கூற வேண்டும்.
அதனால், கல்வித் துறை தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர எமக்கு வேறு மாற்று வழியில்லை.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |