நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விசாரணை...! முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நடுநிலையானதாக இல்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு (CPRP) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே CPRP இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கூர்மையற்ற ஆயுதங்கள்
மேலும் தெரிவித்த அக்குழு, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டினாலும் மேலும் 11 பேர் கூர்மையற்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலும் உயிரிழந்துள்ளமை மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நான்கு உதவி காவல்துறை அத்தியட்சகர்களின் கீழ் பிரத்யேக விசாரணைகளை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா, “தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் மூலம் முழுப் பழியையும் சிறைக்கைதிகள் மீது மட்டுமே சுமத்த முயற்சி நடக்கிறது.
இச்சம்பவத்திற்குப் பொறுப்பான ஏனைய தரப்பினரைக் காப்பாற்றவே அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடுகள்
ஜன்னல்கள் வழியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் தண்டனைச் சட்டக் கோவையின் 294 ஆவது பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அது குறித்துச் சரியான கவனத்தைச் செலுத்தவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இந்த மரணங்களுக்கு முக்கிய காரணம் எனச் சாடிய சேனக்க பெரேரா, மோதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் போன்ற அடிப்படை கலவரத் தடுப்பு உபகரணங்கள் கூட நீர்கொழும்பு சிறைச்சாலையிடம் இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளை முழங்கால் இடவைத்து மன்னிப்புக் கேட்கச் செய்தமை மற்றும் மின்சாரத்தைத் துண்டித்தமை போன்ற செயல்கள் மூலம் கைதிகள் மேலும் கோபமூட்டப்பட்டு வன்முறைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |