நேபாளத்தில் வெடித்த மாபெரும் போராட்டம்: பதவி விலகினார் பிரதமர்
நேபாளத்தின் (Nepal) பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் ஊழல் மற்றும் பொருளாதார சீரழிவுக்காக அரசைக் கண்டித்து நேபாள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் அழுத்தம் காரணமாக அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் போராட்டம்
நேபாளத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகப்புத்தகம் உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞா்கள் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறிய நிலையில், பிரதமர் பதவி விலகியுள்ளார்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தனர்.
மிகப்பெரிய ஊழல்
இந்தநிலையில், அரசின் மிகப்பெரிய ஊழல் மற்றும் பொருளாதாரத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியது.
இதையடுத்து, போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உள்துறை அமைச்சர் மற்றும் விவசாயத் துறை அமைச்சர்கள் பதவி விலகினர்.
தற்போது நேபாள பிரதமர் பதவி விலகியுள்ள நிலையில், அவர் பதவியேற்றதில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை நாட்டில் போராட்டம் பாரியளவில் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
