இஸ்ரேல் போரின் முடிவு குறித்த நெதன்யாகுவின் அறிவிப்பு
மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிற நிலையில், இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் இஸ்ரேல் (Israel) மீது ஹமாஸ் அமைப்பு பாரிய தாக்குதலை முன்னெடுத்து, இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், இன்றையதினம் (07) காசா முனையில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவின் இராணுவ பிரிவான குவாசம் பிரிகேட், இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
முக்கிய நோக்கங்கள்
எனினும், குறித்த தாக்குதலினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளதுடன், ஏவப்பட்ட ரொக்கெட்டுகள் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னிணியில், முதல் ஆண்டு நிறைவை குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் அறிவித்துள்ளார்.
போரின் முடிவு
தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, "ஹமாஸின் தீய ஆட்சியை தூக்கியெறிவது, இறந்தவர்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்கள் என அனைவரையும் வீடுகளுக்குத் திருப்பி அனுப்புவது, காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு வரப்போகும் அச்சுறுத்தலை முறியடிப்பது, எங்களுடைய குடியிருப்பாளர்களைத் திருப்பி அனுப்புவது என நாங்கள் நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் முடித்தவுடன் தான் போரை முடிப்போம்.
எங்கள் குழந்தைகளுக்காக, எங்கள் எதிர்காலத்திற்காக, ஒக்டோபர் ஏழாம் திகதி நடந்தது மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்கிறேன்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |