போர் இன்னும் முடியவில்லை...! ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த பகிரங்க எச்சரிக்கை
ஈரானுடனான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இஸ்ரேல் தொடர்ச்சியாகப் போர்க்களத்திலேயே இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மைலியின் இஸ்ரேலிய வருகையை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், தற்போதைய சூழலை நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலான ஒரு போர் என்று வர்ணித்துள்ளார்.
மேற்கத்திய நாகரிகம்
உலகையே அச்சுறுத்தி வரும் ஈரானின் கொடுங்கோன்மைக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து உறுதியுடன் போராடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தனது நாட்டை அழிப்பதையும், அமெரிக்காவை வீழ்த்துவதையும் மேற்கத்திய நாகரிகத்தையே தரைமட்டமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.

நாங்கள் போர்க்களத்தில் பல மகத்தான சாதனைகளைச் செய்துள்ளோம் என்பது உண்மைதான் ஆனால் போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்று எச்சரித்த அவர், எந்நேரத்திலும் புதிய இராணுவ முன்னேற்றங்கள் அல்லது வியூக மாற்றங்கள் ஏற்படலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டு நடவடிக்கைகளுக்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதை அவர் தனது உரையாடலில் மீண்டும் உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |