விவசாய நவீனமயமாக்கலுக்கு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு: ரணிலின் அறிவிப்பு
2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அதிபர் அலுவலகத்தில் நேற்று (06) விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இடம்பெற்றது.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் முன்னோடித் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான அறிக்கையும் இதன்போது ரணிலிடம் கையளிக்கப்பட்டது.
ஏற்றுமதி சந்தை
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி சந்தைக்கான பொருட்களை போட்டித்தன்மையுடன் வழங்குவதும் அதன் மூலம் ஏற்றுமதிச் சந்தையை வெல்வதும் அந்நியச் செலாவணி மற்றும் விவசாயப் பொருளாதாரத்தை அதிகரிப்பதும் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் இலக்குகளாகும்.
இந்த இலக்குகளை அடைவதற்காக குரங்குகள் மற்றும் காட்டு யானைகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் அறுவடைக்குப் பின்னர் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு பொருத்தமான பொறிமுறையைத் தயாரிப்பது குறித்தும் வெகுவாக ஆராயப்பட்டது.
நவீன தொழில்நுட்பம்
எதிர்கால ஏற்றுமதி சந்தையில் போட்டியை எதிர்கொள்வதற்கு நவீன தொழில்நுட்பம் இன்றியமையாதது எனவும், விவசாய நிலங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலையீடு தேவை எனவும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தனியார் துறை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இலங்கை எனும் தனித்துவத்துடன் கூடிய பொருட்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கு தற்போதுள்ள தடைகளை நீக்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தலையீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |