சுரக்சா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய சலுகைகள்: அமைச்சரவை அங்கீகாரம்
2026/2027ஆம் ஆண்டுக்கான சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய நன்மைகளைச் சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, செவிப்புலன் உள்வைப்பு (Cochlear Implant) சாதனங்களைப் பழுதுபார்ப்பதற்காக 75,000 ரூபா வரை காப்புறுதிப் பயன்களை வழங்குவதற்கும், நீண்டகால நோய்களுக்காகத் தொடர்ச்சியாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு 20,000 ரூபா வரை நன்மைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தோல் புற்றுநோயைக் கண்டறிதல் உள்ளிட்ட பெயரிடப்பட்ட விசேட மருத்துவப் பரிசோதனைகளுக்காக 20,000 ரூபா வரை காப்புறுதிப் பயன்களை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம்
கடுமையான நோய்களுக்கான காப்புறுதிப் பயன்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பரிசோதனைகள், PET Scan பரிசோதனைகள், அவசர விபத்துகளால் மேற்கொள்ளப்படும் சில மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கான செலவுகள் ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், கல்வி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் கல்விச் சுற்றுலாக்கள், விளையாட்டு விழாக்கள் உள்ளிட்ட செயற்பாடுகளின்போது ஏற்படும் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டால், 100,000 ரூபா இழப்பீடு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2026 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2027 ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தப் புதிய நன்மைகளுடன் சுரக்சா மாணவர் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் உதவி பெறும் விசேட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் காப்புறுதிப் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |