இலங்கை,பாகிஸ்தான் சாதனைகள் தகர்ப்பு : சம்பியன்ஸ் கிண்ண தொடரில் புதிய வரலாறு படைத்தது அவுஸ்திரேலிய அணி
பாகிஸ்தானில்(pakistan) நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இன்று(22) இங்கிலாந்துக்கு(england cricket team) எதிரான போட்டியில் 352 ஓட்டங்கள் இலக்கை விரட்டிப் பிடித்து அவுஸ்திரேலிய அணி(australia cricket team) புதிய வரலாறு படைத்துள்ளது.
லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.
இங்கிலாந்து வீரர் அதிரடி
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். பில் சால்ட் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜேமி ஸ்மித் 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 78 பந்துகளில் 68ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்கம் முதலே சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை விரட்டி விளையாடிய பென் டக்கெட் 95 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் பென் டக்கெட் தனதுது 3-வது சதத்தைப் பதிவு செய்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பென் டக்கெட்டின் இரண்டாவது சதம் இதுவாகும்.
இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் ஹாரி ப்ரூக் 3 , அணித்தலைவர் ஜோஸ் பட்லர் 23 , லியம் லிவிங்ஸ்டன் 14 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், பென் டக்கெட் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 143 பந்துகளில் 165 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 352ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நட்சத்திர வீரர் ட்ராவிட் ஹெட் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஷார்ட் மட்டும் பொறுப்புடன் விளையாடினார்.
மார்னஸ் லாபுஷேன் 47 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஸ் இங்லீஸ் (Josh Inglis)- ஹரி ஜோடி நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைத்து நின்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். 5 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் குவித்த நிலையில், அலெக்ஸ் ஹரி 69 ஓட்டங்களில் வெளியேறினார்.
விஸ்வரூபமெடுத்த அவுஸ்திரேலிய வீரர்
மற்றொருபுறம் அனைத்து பந்துகளையும் சிதறடித்த இங்லீஸ் 77 பந்துகளில் சதமடித்து புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன்னதாக 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக வீரேந்தர் ஷேவாக் 77 பந்துகளில் அதிவேகமாக சதமடித்திருந்த நிலையில், அந்த சாதனையை சமன்செய்துள்ளார் ஜோஸ் இங்கிலீஸ்.
அவருடன் ஜோடி சேர்ந்த கிளென் மக்ஸ்வெல் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார். கடைசி பந்துவரை களத்தில் இருந்த இங்லீஸ், சிக்ஸர் அடித்து அவுஸ்திரேலிய அணிக்கு புதிய வரலாறு படைத்தார். முடிவில் 86 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 120* ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
47.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு அவுஸ்திரேலிய அணி 356 ஓட்டங்கள் குவித்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. பென் டக்கெட் அதிரடியாக 165 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களால் எந்த பலனும் இல்லாமல் போனது.
இலங்கை,பாகிஸ்தான் சாதனைகள் தகர்ப்பு
2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றதற்கு பின்னர் அவுஸ்திரேலிய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். மேலும், சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் 2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 322 ஓட்டங்கள் இலக்கை விரட்டிய சாதனையையும் அவுஸ்திரேலியா முறியடித்துள்ளது.
ஐசிசி தொடர்களில் 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 345 ஓட்டங்கள் இலக்கை எட்டியதே இதுவரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
