இலங்கையில் அறிமுகமாகும் புதிய சட்டம் - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..!
இலங்கையில் உள்ள அனைத்து மதங்களையும் பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்கா புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மை நாட்களில் மதங்களுக்கும் அதன் படிப்பினைகளுக்கும் எதிராக பல்வேறு தரப்பினரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பிண்ணனியிலேயே, இந்த நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கூறியுள்ளார்.
மத அவமதிப்புக்கள்
இலங்கையின் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ, நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிரிசூரிய மற்றும் இராஜாங்கனை சத்தானந்த தேரர் ஆகியோர் அண்மைக் காலங்களில் மதங்களை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில், மதங்களை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்கனை சத்தானந்த தேரர் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நதாஷா எதிரிசூரிய எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கைகள்
இவ்வாறான நிலையில், இலங்கையில் மதங்களை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் இதனை தடுப்பதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சிறிலங்கா புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின் மூலம் இலங்கையின் மத சுதந்திரம் பாதுகாக்கப்படுவதோடு, மதங்களைப் பற்றி இழிவான தகவல்கள் பரப்பப்படுவது தடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை மற்றும் தண்டனைச் சட்டத்தின் மூலம் இவ்வாறான தவறுகள் நடைபெற்றதன் பின்னர் அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என விதுர விக்ரமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டத்தின் மூலம் மதங்களை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க முடியுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மதங்களை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்படுபவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
