புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெற்றிக்குத் துணைநின்ற புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து, அவர்களின் முதுகில் குத்தும் விதமாகவே வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
புலம்பெயர் தமிழர்கள்
"கடந்த 2026 செப்டம்பர் 30ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 'வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல்' என்ற புதிய சட்டமூலமானது, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களைத் தடை செய்யும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வெற்றிக்கு உழைத்த புலம்பெயர் தமிழர்கள் மீது நல்ல எண்ணங்கள் இருந்தன.
ஆனால், இன்று தமக்கு உதவியவர்களின் முதுகிலேயே இந்த அரசாங்கம் குத்தியுள்ளது.
கடுமையான எதிர்ப்பு
கடந்த நவம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற பொருளியல் குழுக் கூட்டத்திலும் இச்சட்டமூலத்திற்கு எனது கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்திருந்தேன்.

பழைய பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்படும் இப்புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாகத் திருத்துமாறு அல்லது நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் 8 சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் நிபுணர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி மீதான தடை நீக்கப்பட்டு இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்து தமது வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையைப் பெற்றுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவும், முன்னாள் போராளிகள் சுதந்திரமாக அரசியல் செய்யவும் இந்த அரசாங்கம் ஏன் தயங்குகிறது?" எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |