யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் புதிய மெட்ரோ பேருந்து சேவை
புதிய மெட்ரோ பேருந்து சேவைப் படை அடுத்த சில வாரங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மெட்ரோ பேருந்து சேவையை இந்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து மொத்தம் 121 மெட்ரோ பேருந்துகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது பதிவு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சட்டரீதியான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சட்ட நடவடிக்கை
தேவையான பதிவு மற்றும் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த பேருந்துகளை பொதுமக்களின் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் கூறியுள்ளார்.

ஏற்கனவே மெட்ரோ பேருந்து சேவைக்காக பல புதிய வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், ஜப்பானில் இருந்து கூடுதலாக 50 பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் கொழும்பைத் தாண்டி நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் மெட்ரோ சேவையை விரிவுபடுத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு முடிவுக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலும் மெட்ரோ பேருந்து சேவையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக இரு மாவட்டங்களிலும் மெட்ரோ பேருந்து நிலையங்கள் (டிப்போக்கள்) அமைக்கப்பட வேண்டும் என பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
தனியார் வாகனப் பயன்பாட்டை குறைத்து அதிகமான பயணிகளை பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தச் செய்வதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைக் குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
எதிர்கால மெட்ரோ பேருந்துகளில் பயணிகளுக்கான தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வழங்கப்படும் எனவும், 2030 ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ பேருந்து படையை 500 இற்கும் அதிகமாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |