தொடருந்து சேவைகளுக்காக புதிய செயலி அறிமுகம்!
தொடருந்து சேவைகள் தொடர்பாக ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய செயலி ஒன்று தொடருந்துத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (23) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் தமக்கான ஆசனங்களை முன் பதிவு செய்வதற்காக இந்த செயலியினைப் பயன்படுத்த முடியும் என தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆசன முன்பதிவு
ஆசன முன்பதிவு மாத்திரமல்லாமல், தொடருந்திலுள்ள ஆசனங்கங்களின் எண்ணிக்கை, தொடருந்தின் வருகை மற்றும் சென்றடையும் நேரங்கள், தொடருந்தின் நேர தாமதங்களை இந்த செயலி மூலமாக நேரலையாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தொடருந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்து வர இருக்கும் தொடருந்து நிலையம் தொடர்பான விவரங்களையும் இந்த செயலி மூலமாக நேரலையாக தெரிந்து கொள்ளலாம் என தொடருந்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அது மாத்திரமல்லாமல் ஆசனங்களை இந்த செயலி மூலமாக முன்பதிவு செய்யும் போது தொடருந்து பெட்டியின் நிலை, தொடருந்தின் புகைப்படம், ஆசனங்களின் வகைகள், ஆசனத்தின் எண், தொடருந்தின் கால அட்டவணை போன்ற பல்வேறு விடயங்களை இந்த செயலியின் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் பயணிகளுக்கு எழுகின்ற சந்தேகங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் எனப் பல்வேறு தகவல்களையும் இந்த செயலி மூலமாக அறிந்து கொள்ளலாம்.
சிங்களம், மற்றும் ஆங்கில மொழி
அதுமாத்திரமல்லாமல் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏதுவாக சிங்களம், மற்றும் ஆங்கில மொழி உள்ளீடாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சலுகைகளைக் கொண்ட செயலியினை இலங்கையிலுள்ள பயணிகள் வலையமைப்பு அமைப்பான RDMNS நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த செயலியினை நேற்றைய தினம் (23) சிறிலங்கா தொடருந்து திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
RDMNS.LK என்ற இணையத்தளத்தினை அணுகி பயணிகள் அவர்களது தோடருந்து சேவைகளை இலகுவாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |