ஈஸ்டர் தாக்குதலில் தாஜுதீனின் நண்பர் இறந்ததில் எழுந்துள்ள புதிய சந்தேகங்கள்
வாசிம் தாஜுதீன் (Wasim Thajudeen) கொலைச் சம்பவத்திற்கும், வாகன விற்பனை வர்த்தகம் செய்த மொட்டு கட்சி உறுப்பினரின் கணவர் உயிரத்த ஞாயிறு தாக்குதலில் மரணமடைந்தமைக்கும் தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை தரப்பிடையே சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
வாசிம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது நண்பரான குறித்த தொழிலதிபருடன் தங்கியிருந்தார் என்பது முன்னர் தெரியவந்துள்ளது.
இதன்படி வாகன விற்பனை செய்யும் தொழிலதிபரின் மனைவி பொதுஜன பெரமுனவின் தலைவருடன் நெருங்கிய அரசியல் தொடர்புடையவர் என்றும், மேலும் 2018 உள்ளூராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று ஷங்கரிலா ஹோட்டலில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் குறித்த தொழிலதிபர் கொல்லப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால (Maithripala Sirisena) சிறிசேனவுக்கு எதிராக அருட்தந்தை சிரில் காமினி (Cyril Gamini) தாக்கல் செய்த மனுவில், தொழிலதிபர் குண்டுவெடிப்பில் இறந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த தொழிலதிபர் தாக்குதல் இடம்பெற்ற அன்று ஏன் தனியாக ஷங்க்ரிலா ஹோட்டலுக்குச் சென்றார்? அவர் ஏன் திடீரென ஹோட்டல் லொபிக்கு வந்தார் என்பதற்கான விசாரணையில் இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி தாஜுதீன் தொடர்பாக பல உண்மைகளை அவர் வெளியிடவிருந்தார் என்றும், இது தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதங்கள் நடந்ததாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இவை காவல்துறையினரிடையே சந்தேகத்தை மேலும் தீவிரப்படுத்துவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
