லட்சக்கணக்கான மரணங்களுக்கு வாய்ப்பு!! உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கை
ஐரோப்பாவில் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் கொரோனா தொற்றால் மேலும் லட்சக்கணக்கான மரணங்கள் பதிவாகும் என உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் புதிய புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் அடுத்து வைத்தியசாலைகள் அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அடுத்து தற்காலிக கொரோனா மருத்துவமனைகள் செயற்படத் தொடங்கியுள்ளன.
கொரோனா தொற்றுப் பரவல் வீழ்ச்சி அடையாத பட்சத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலந்து அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இறுதியாக கடந்த 24 மணித்தியாலங்களில் 28 ஆயிரத்து 380 பேர் புதிததாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 460 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கொரோனா தொற்று எண்ணிக்கை 17 வீதத்தால் அதிகரித்துள்ள அதேவேளை கடந்த ஐந்து வாரங்களாக தொற்று எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மிகக் குறைந்த தடுப்பூசி மருந்தைப் பெற்றவர்களை கொண்ட போலந்தில், இதுவரை 64 வீதமானவர்கள் மாத்திரே இரண்டு கட்ட தடுப்பூசி மருந்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் டிசம்பர் மாத நடுப்பகுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ச்சி அடையாத பட்சத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படலாம் என போலந்து சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளிலும் நாளாந்த கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை பதிவுசெய்துள்ளது.
இதன்காரணமாக குளிர்காலத்திற்கு முன்னதாகவே வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பும் அபாய நிலைமை ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
5.5 மில்லியன் சனத்தொகையை கொண்ட சிலோவாக்கியாவில் நாளாந்த தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளதுடன், செக்குடியரசிலும் முதல் முறையாக நாளாந்த தொற்று எண்ணிக்கை 25 ஆயிரம் என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது.
ஐரோப்பாவின் ஏனைய பல நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் ஏனைய பொது இடங்களுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐரோப்பா மற்றும் ஆசியாவின் ஒரு பகுதியில் உள்ள நாடுகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கொரோனா தொற்றினால் மேலும் 07 இலட்சம் பேர் உயிரிழப்பார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருந்தது.
அத்துடன் ஏற்கனவே ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள 53 நாடுகளில் கொரோனா தொற்று மரணங்கள் 15 இலட்சத்தை தாண்டியுள்ளதாகவும் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையில் அனைத்து வயது வந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொடுப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது சுகாதார நிறுவகம் பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.