அரச தலைவர்களுக்கான மாநாட்டுக்கு மத்தியிலும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதியை சந்தித்த கோட்டாபய!
ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டுக்கு மத்தியிலும் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இருநாடுகளுக்கும் இடையில் காணப்படும் 25 வருட கால தூதரகத் தொடர்புகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனாத் தொற்றுப் பரவல் நீங்கியவுடன், இரண்டு நாடுகளின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.