நாட்டில் முக்கிய துறை ஒன்றை மேம்படுத்த முன்வந்துள்ள நியூசிலாந்து
இந்நாட்டில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க நியூசிலாந்து (New Zealand) அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் (David Pine) ஆகியோர் நேற்று (30) விவசாய அமைச்சில் சந்தித்த போதே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் பால் உற்பத்தித் தொழிலை ஊக்குவிப்பதுடன், எமது நாட்டில் விளையும் அன்னாசி, மாம்பழம் மற்றும் ஆனைக்கொய்யா போன்றவற்றை பயிரிடுவதற்கு நியூசிலாந்து அரசாங்கத்தின் ஆதரவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
தொழில்நுட்ப உதவி
எமது நாட்டில் பால் உற்பத்திக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் நியூசிலாந்து அரசாங்கத்தினால் வழங்க முடியும் எனவும், இது தொடர்பில் நியூசிலாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சந்திப்பில், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |