இலங்கையின் அரிய இயற்கை நீர்நிலையான நீல்திய பொக்குண ஆரம்பமாகவுள்ள சுற்றுலா நடவடிக்கை
இலங்கையின் அரிய இயற்கை நீர்நிலை வளமாகக் கருதப்படும் நீல்திய பொக்குண (Nil Diya Pokuna) பகுதியை பாதுகாப்பதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் அங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பதுளை மாவட்டம், எல்ல பிரதேச செயலகப் பிரிவின் கரந்தகொல்ல கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராவணா எல்ல சரணாலயத்தின் நிலத்தடி குகைத் தொகுதிக்குள் நீல்திய பொக்குண அமைந்துள்ளது. இது அரிய இயற்கை நீரூற்றாகக் கருதப்படுகிறது.
அதன் தனித்துவமான புவியியல் அமைப்புகள் காரணமாக, இந்த இடம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
நீல்திய பொக்குண
இந்த இடத்தை ஆய்வு செய்து, அதன் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பல்கலைக்கழக கல்வியாளர்கள் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அந்தக் குழுவின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், நீல்திய பொக்குண பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டன.
அந்த விதிமுறைகள் சட்டவரைவு வரைவாளரால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தற்போது, விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிகளின் கீழ், இந்த விதிமுறைகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக சுற்றுச்சூழல் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம், நீல்திய பொக்குண பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையின் கீழ் மேற்கொள்ள முடியும். அதேவேளை, இந்த இயற்கைச் சூழலின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |