பாதீட்டில் புறக்கணிக்கப்பட்ட வாகன இறக்குமதிக்கான சலுகைகள்
2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதி குறித்து எந்தவித நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்
அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் வாகன இறக்குமதியாளர்களும் பொதுமக்களும் வாகன இறக்குமதி தொடர்பான சலுகைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்று (12) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த குறித்த வரவு-செலவுத் திட்டத்தில், வாகன இறக்குமதி வரிகள் அல்லது மேலதிக கட்டணங்கள் எதிலும் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்று அவர் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சிடம் கோரிக்கை
வாகன இறக்குமதித் துறைக்குச் சலுகைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, நிதி அமைச்சிடம் தாங்கள் வினவியிருந்ததாகவும் அரோஷ ரொட்ரிகோ கூறினார்.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தற்போதைய நடைமுறைகளின் கீழாவது வாகன இறக்குமதியைத் தொடர்ந்து அனுமதிக்கலாம் என்று நிதி அமைச்சு சுட்டிக்காட்டியதாக ரொட்ரிகோ தெரிவித்தார்.
மேலும், கடன்-மதிப்பு விகிதம் (Loan-to-Value ratio) தொடர்பான விதிமுறைகள், அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாகன இறக்குமதித் துறைக்குச் சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும், வரவு-செலவுத் திட்டத்தில் எந்தச் சலுகைகளும் வழங்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |