பிரதியமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
பிரதியமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரமுடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்த சபாநாயகரின் முடிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர்களுக்கு எதிரான தீர்மானங்கள் குறித்து எர்ஸ்கைன் மே, கவுல் எண்ட் ஷக்தர் போன்ற நாடாளுமன்ற மரபுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானங்கள்
மேலும் பிரதி அமைச்சர் ஒருவர் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாறும்போது, நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்படவில்லை என்று கூறி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதை நிராகரிக்க முடியாது.
நிலையியற் கட்டளைகளில் அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான குறிப்பிட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்றாலும், மௌனம் சாதிப்பது அவற்றைக் கொண்டுவர முடியாது என்று அர்த்தமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
அரசியலமைப்பின் 46 (1) வது பிரிவின்படி, பிரதி அமைச்சரொருவர் நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்துவதால், அத்தகைய நம்பிக்கையில்லா பிரேரணைகளைக் கொண்டு வருவது ஒரு பாரம்பரியமாகும் என்பதுடன் அது ஒரு வெஸ்ட்மின்ஸ்டர் மரபுமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பிரிவு 45 (3) இன் கீழ், ஒரு பரந்த அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்க வாய்ப்பு உள்ளது.
எதிர்க்கட்சியின் கருத்து
நாடாளுமன்ற நடைமுறைகள் தொடர்பான முன்னுதாரணங்களை சபாநாயகர் கலந்தாலோசித்திருந்தால், பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்கலாம்.
சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் நாடாளுமன்ற செயலக பணியாளர்கள் வழங்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், இவற்றைக் கலந்தாலோசித்து எதிர்க்கட்சியின் கருத்துக்களை சபையில் சமர்ப்பிக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
