இது மோசமான நாடாளுமன்ற உத்தி! எதிர் கட்சியில் ரணில் இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பார்....
நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பதை கண்டறிய இன்று நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு தவறான உத்தி எனவும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியில் இருந்து இருந்தாலும் அதற்கு எதிராகவே வாக்களித்திருப்பார் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பதை கண்டறிய இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பு தோல்வியடைந்தமை குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களில்,
"எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோருடன் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடத்த விரும்புவதாக பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்கள் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விவாதத்தை நடாத்த விரும்புவதாக குறித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்கனவே ஒழுங்குப் புத்தகத்தில் இருப்பதால் அது பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் என்று பிரதமர் அவர்களுக்கு விளக்கினார்.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய வீடு தாக்கப்படுவதே அவர்களுக்கு மிக முக்கியமான பிரச்சினை என்பதால், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான வாக்கெடுப்பை அவர்கள் தோற்கடிப்பார்கள். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று (17) மீண்டும் சபையில் விளக்கமளிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் தவறான உத்தியைத் தேர்ந்தெடுத்து, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான வாக்கெடுப்பை முன்னெடுத்தனர். நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான வாக்கெடுப்பின் தோல்வி அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என வாக்கெடுப்பைத் தொடர்ந்து பிரதமர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.
இது மோசமான நாடாளுமன்ற உத்தி எனவும் ரணில் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு எதிராக வாக்களித்திருப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது", எனக் குறிப்பிட்டுள்ளது.