முன்னதாக அறிவித்தபடி எதுவும் நடக்காது - பல்டி அடித்தார் சபாநாயகர்
நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது
முன்னதாக அறிவித்தபடி நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இராஜினாமா கடிதம் கிடைக்கப்பெற்ற பின்னர், மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமாவை நேற்றையதினம் (13) கையளித்ததன் பின்னர் நாளை (15) நாடாளுமன்றத்தை கூட்டுவது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் தீர்மானம்
சிறிலங்கா அதிபர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜூலை 18 திங்கட்கிழமை அதிபர் பதவிக்கான வேட்புமனுக்களை ஏற்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு, ஜூலை 20ஆம் திகதி புதன்கிழமை புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்திருந்தனர்.
எவ்வாறாயினும், சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் மாலைத்தீவுக்கு தப்பிச் சென்று இன்று சிங்கப்பூர் சென்று அங்கு அடைக்கலம் கோரியிருந்த நிலையில், நேற்றைய தினம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ரணிலின் நியமனம்
சிறிலங்கா அதிபர் தனது இராஜினாமாவை இன்னும் கையளிக்கவில்லை என்பதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பதில் அதிபராக நியமித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கத் தவறியதன் காரணமாக, இலங்கையில் அரசியல் குழப்பம் மேலும் தீவிரமடைவதோடு, திட்டமிட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சீர்குலைத்துள்ளன.
