அநுர ஆட்சியில் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை : எழுந்துள்ள குற்றச்சாட்டு
கடந்த ஆட்சிக் காலங்களில் ஏதோ ஒரு வகையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் இதுவரை எந்த ஒரு அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
நேற்று (31) மாலை யாழ். சிவகுரு ஆதீனத்தில் முன்னெடுக்கப்பட்ட "நீதிக்கான சாட்சி" என்ற நூதனப் போராட்டத்தில் கலந்து கொண்டு சாட்சி உரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் பேரிலே இன்றும் அரசியல் கைதிகள் சிறைகளில் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசியல் கைதிகளின் துயர வாழ்க்கை
30 வருடங்களை கழிந்து 31வது வருடத்தில் அரசியல் கைதிகளின் துயர வாழ்க்கை ஆரம்பிக்கிறது. இன்னமும் பத்து அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுகின்றனர்.
அவர்களில் சிவகுமார் பார்த்திபன் என்பவர் 30 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். அரசியல் கைதிகளின் ஆயுள்கள் குறைவடைந்து செல்கின்றன.

30 ஆண்டுகள் என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அரைவாசி காலம். மீதி காலத்திலாவது அவர்கள் தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த வலிகளை அனுபவித்ததில் நானும் ஒருவன் என்ற வகையில் இந்த பொறுப்பான கடமைகளை செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகின்றோம். அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுத்து அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இந்த நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்பவர்களை ஒரு பயங்கரவாதிகள் போல் பார்த்து இந்த அரசு நடத்துகின்ற நிலை காணப்படுகின்றது.
இனப் பிரச்சினையின் விளைவாகத்தான் போர் ஏற்பட்டது அந்தப் போராட்டத்தின் விளைவாக தான் அவர்கள் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கை - இந்தியா ஒப்பந்தம்
கடந்த ஆட்சி காலங்களில் அரசியல் கைதிகள் ஏதோ ஒரு பொறிமுறையில் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். இலங்கை - இந்தியா ஒப்பந்தம் தொடக்கம் சமாதான காலம் வரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டும், பரிமாறப்பட்டு கொண்டும் இருந்தார்கள்.
விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில், நீதிமன்றங்களில் வழக்கு காணப்பட்டபோது கூட இரவோடு இரவாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் தற்போது இருக்கின்ற அரசாங்கம் வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் ஒரு அரசியல் கைதியை கூட இதுவரை விடுதலை செய்யவில்லை.

நாங்கள் கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோருக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதைவிட நீதி அமைச்சரை நேரில் கூட சந்தித்திருந்தோம்.
தற்போதுள்ள அரசாங்கமானது அடக்கு முறைக்கு எதிராக இரண்டு தடவை ஆயுதம் தூக்கி போராடியது. இவர்களிலும் கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் இருந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதிகளாக இருந்தார்கள்.
ஆனால் இது ஒரு பொறிமுறை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் இன்று ஆட்சியில் இருக்கின்றார்கள். வலியை உணர்ந்தவர்கள் வழிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இருந்தன. ஆனால் இன்று வரை அது தொடர்பான எந்த விதமான சமிக்ஞைகளும் தென்படவில்லை.
விடுதலைப் போர் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவர்களை சிறையில் வைத்திருப்பதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை நமது வலுவான கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்