அரசியல்வாதிகளின் சொத்து விபரம் இனி பகிரங்கம்! திட்ட வட்டமாக அறிவித்த அரச தரப்பு
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தும் போது, அவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06-08-2026) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்கள் குறித்து தெளிவுபடுத்திய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் பிரதிநிதிகள் சாதாரண அரச அதிகாரிகளை விட வேறுபட்ட ஒரு பிரிவினர் என்பதால், அவர்களின் சொத்துக்கள் குறித்து அறிந்துகொள்ளப் பொதுமக்களுக்கு முழுமையான உரிமை உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னர் 300 உயர்மட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த சொத்துப் பிரகடன சமர்ப்பிப்பு செயல்முறை, புதிய சட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஒரு இலட்சத்து அறுபதாயிரமாக (160,000) விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் போது, சில பொறுப்பற்ற நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அதிகாரிகளின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களைத் தவறாகப் பயன்படுத்தி அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தளத்தில் பதிவேற்றம்
மேலும் தெரிவித்த அமைச்சர், “லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விபரங்களைச் சிதைத்து சில ஊடக நிறுவனங்கள் நபர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன.
இதன்காரணமாக அரச அதிகாரிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காகச் சில கட்டுப்பாடுகளை விதிக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்மொழிந்தது.

இருப்பினும், ஒரு அரசாங்கமாக நாங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு அந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தக்கூடாது எனத் தீர்மானித்தோம்.
அவர்களினதும் அவர்களின் உறவினர்களினதும் சொத்துக்கள் குறித்து பொதுமக்கள் எந்த நேரத்திலும் பரிசீலிப்பதற்கான உரிமையை நாங்கள் அப்படியே உறுதிப்படுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திருத்தத்தின் மூலம் அரச அதிகாரிகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதேவேளையில், அரசியல்வாதிகளின் நிதிப் வெளிப்படைத்தன்மையை (Financial Transparency) மேலும் உயர் மட்டத்தில் பேண எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |