ட்ரம்பின் அழைப்பை நிராகரித்து பேச்சுவாரத்தைக்கான கதவை மூடியது ஈரான்
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.
ட்ரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் பதிவில், “இனி பேச்சுவார்த்தை கிடையாது என்பதிலிருந்து நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என்பது வரை அமெரிக்க ஜனாதிபதியின் முரண்பாடான சமிக்ஞைகளைக் கண்டு யாரும் திசைதிரும்ப வேண்டாம்.
ஈரானின் கோரிக்கைகளை நிறைவேற்றினாலே பேச்சு
எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை சார்ந்த சூழல் மாறிவிட்டது. சேதத்தைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளால் வரப்போகும் நிகழ்வுகளைத் தடுக்க முடியாது. ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அமெரிக்கா வாக்குறுதி கொடுக்கும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இது மிகவும் ஆரம்பநிலை என்று பல நாள்களாகக் கூறி வந்த ட்ரம்ப், நேற்று தனது சமூக ஊடகப் பதிவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்
அந்தப் பதிவில், "வீழ்ச்சியடைந்து வரும் ஈரான், மிக விரைவாகவும் தீவிரமாகவும் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா இதில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிப்பேன். ஆனால், அப்படியான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

போர் நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை விலக்கிக் கொள்ள,போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது போன்ற கோரிக்கைகளை அமெரிக்காவிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்கா இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 18 மணி நேரம் முன்