பயங்கரவாதத்திற்கு இடமளியோம் - பிரதமர் மகிந்த ஆணித்தரம்
எதிர்காலத்தில் பயங்கரவாதத்திற்கு இடமளிக்காமல் சுதந்திரமாக வாழவும், மதத்தை பின்பற்றவும் தாம் நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தில் இணைந்து கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும், அவர்களுக்கான பிற கடமைகளையும் நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும்.
எனவே, அதனை எவ்வித சமரசமும் இன்றி நிறைவேற்றுவோம். ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மத, இன பாகுபாடின்றி செயற்படுவதை உறுதிசெய்ய வேண்டும். எனவே இத்தருணத்தில் உங்களுக்கு ஏதாவது வழங்கப்பட வேண்டியிருப்பின், அதை வழங்குவது எங்கள் பொறுப்பு.
இத்தேசத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். இன, மத பேதமின்றி வாழ்வதற்கான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோன்று நாட்டின் அபிவிருத்திக்காகவும் நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பாகுபாடின்றி நாடு பூராவும் சமமாக எமது அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் என்பதை புதியதாக கூற வேண்டியதில்லை.
அந்த அபிவிருத்தியுடன் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.
எங்கள் கடமையைச் செய்ய நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறேன் எனக் குறிப்பிட்டார்.