பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று ஆரம்பம்
இலங்கையின் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களிலும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 11ஆம் திகதி மதியம் 12 மணிவரை கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்பணம் செலுத்துதல்
எனினும் இறுதி தருணத்தில் கட்டுப்பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இறுதி தருணத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதியில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வேட்பு மனு கையளிப்பு காலப்பகுதியில் விசேடப் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
காவல்துறை தலைமையகம்
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு காலப்பகுதியில் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வேட்பு மனு கையளிப்பு மத்திய நிலையங்களுக்கு அருகில் மக்கள் ஒன்று கூடியிருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பேரணி போன்ற செயற்பாடுகளில் ஈடுபட முற்பட்டால் அதனைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |