அடுத்தடுத்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை! கலக்கத்தில் அண்டை நாடுகள்
வட கொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஒரு ஜோடி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளது. வட கொரியா தனது கிழக்கு கடற்பரப்பில் இரண்டு சந்தேகத்திற்குரிய ஏவுகணைகளை ஏவியதாக ஜப்பானிய பிரதமர் சுகா யோஷிஹைட் இன்று தெரிவித்தார்.
ஜப்பானின் கடலோர காவல்படை - அந் நாட்டு நேரப்படி காலை 7 மணிக்குப் பின்னர் முதல் ஏவுகணை ஏவப்பட்டதாக கூறியது. இது சுமார் 420 கிமீ (260 மைல்) பறந்தது. அதன்பிறகு இரண்டாவது ஏவுகணை 20 நிமிடங்கள் பின்னர் ஏவப்பட்டதாகவும், அது சுமார் 430 கிமீ (270 மைல்) பறந்தது என்று கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் கீழ் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைச் சோதனை வட கொரியாவின் சட்டவிரோத ஆயுதத் திட்டம் அதன் அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகிறது என்று அமெரிக்க இராணுவத்தின் இந்தோ-பசிபிக் கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த நடவடிக்கை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பதற்றத்தை தூண்டுவதாகவும், வட கொரியா கொள்கையை இறுதி செய்யும் பைடன் நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.