கதிர்காம யாத்திரை நாயைத் தாக்கிய இளைஞருக்கு 100 ரூபாய் அபராதம்
கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து கல்முனை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, கல்முனை தலைமையகப் காவல்துறையினரால் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு, 2026 ஜூன் 28ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவர் 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஒத்திவைத்த சிறைதண்டனை
இந்நிலையில், வழக்கு கடந்த செப்டம்பர் 7ஆம் திகதிமீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இதன்போது, ‘சுப்பிரமணியம்’ என்ற நாயைத் தாக்கிய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்த நீதவான், மூன்று மாத சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
அபராதத் தொகையைச் செலுத்தியதைத் தொடர்ந்து, சந்தேகநபர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |