மர்மதேச தலைவருக்கு இப்படியும் இரக்க குணமா - பாராட்டு மழையில் அவர்
வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜோங் உன் என்றவுடன் அவரது கடுமையான தண்டனைகளும், உத்தரவுகளும்தான் நினைவுக்கு வரும், தற்கால சூழலில் சர்வாதிகார ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக கிம் ஜோங் உன்னை பலரும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், அவரது சமீபத்திய செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
வடகொரியாவை சேர்ந்த ரி சுன் ஹி என்ற பத்திரிகையாளர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள அரசு தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தை 1994-ல் மரணம் அடைந்த தருணம் முதல் 2006-ல் வடகொரியா முதல் அணு ஆயுத சோதனை நடத்தியது வரையில் முக்கிய நிகழ்வுகளை ரி சுன் தொகுத்து வழங்கியுள்ளார்.
வடகொரிய மக்களால் நன்கு அறியப்படும் அவருக்கு, சொகுசு வீட்டை அதிபர் கிம் ஜோங் உன் பரிசளித்துள்ளார். தலைநகர் பியோங்யங்கில், ஆற்றங்கரை அருகே உள்ள பிரமாண்ட வளாகத்திற்குள் இந்த சொகுசு வீடு அமைந்துள்ளது.
இந்த வீடு பெரிய ஹோட்டலைப் போன்று இருப்பதாகவும், இதற்காக தனது குடும்பம் அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ரி சுன் ஹி கூறியுள்ளார். ரி சுன் ஹியை பாராட்டியுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அவர் நாட்டின் ஒரு பொக்கிஷம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
