புடினுடனான சந்திப்பிற்காக ரஷ்யா புறப்பட்டார் வடகொரிய அதிபர்
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகருக்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
கிம் தனது வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் பாதுகாப்பான ரயில் வடகொரிய தலைநகர் பியாங்யாங்கிலிருந்து புறப்பட்டதாகத் தெரிகிறது என்று தென் கொரிய ஊடகங்கள் அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு
இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிம் "வரும் நாட்களில்" ரஷ்யாவிற்கு விஜயம் செய்வார் என்று கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.
புடினுடனான உச்சிமாநாடு நடந்தால், இது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வட கொரியத் தலைவரின் முதல் சர்வதேச பயணமாகவும், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு முதல் முறையாகவும் இருக்கும்.
ட்ரம்புடனான சந்திப்பு தோல்வி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வட கொரியாவின் அணு ஆயுதக் குறைப்புப் பேச்சுக்கள் தோல்வியடைந்த பின்னர், கிம்மின் கடைசி வெளிநாட்டுப் பயணமானது 2019 ஆம் ஆண்டில் புடினுடனான அவரது முதல் உச்சிமாநாட்டிற்காக விளாடிவோஸ்டாக் சென்றமை குறிப்பிடத்தக்கது.
கிம் 2019 இல் ரயிலில் விளாடிவோஸ்டோக் சென்றிருந்தார்.